Friday, April 26, 2019

சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் வீடியோ கேம்..!!!



Video game that affects the mental health of children..!!!

வீடியோ கேம் விளையாட்டுகளின் முடிவுகள் பெரும்பாலான சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறன. சிறுவர்கள் சந்தோஷமாக பொழுது போக்க வீடியோ கேம் விளையாடுகிறார்கள். பல மணி நேரத்தை வீடியோ கேம்களிலேயே நிறைய குழந்தைகள் செலவிடுகிறார்கள். விளையாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு சிறுவர்களிடம் வெளிப்படுவதில் தவறில்லை.
அதுவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது. ஏனெனில் இந்த 


விளையாட்டின் முடிவு பெரும்பாலான சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. விளையாட்டில் பல்வேறு தடைகளை கடந்து வெற்றி பெற வேண்டியிருக்கும். அது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். அதேவேளையில் இறுதிகட்டத்தை நெருங்கும் வேளையில் தோல்வியை சந்திக்கும்போது அது மனதை வெகுவாக பாதிப்புக்குள்ளாக செய்து விடும்.
அதேபோல் ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளை சந்திக்கும்போது தடுமாற்றம் ஏற்படும். ரிமோட்டின் கட்டுப்பாட்டில் மனம் இயங்குகின்ற  சூழல் அவர்களுக்குள் உருவாகிவிடும். பெரும்பாலான வீடியோ கேம்கள் நாயகன் எப்படி பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்கின்றான் என்பதை சித்தரிக்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு குறுக்கு வழிகளை கையாளும் வித்தைகளையும் வீடியோ கேம்கள் சொல்லி கொடுக்கின்றன.
அவை குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்களை விதைத்துவிடும். வெற்றி பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான சிந்தனையும் மேலோங்க செய்துவிடும். இது தீய பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கு அச்சாரமிடக்கூடும். சில வீடியோ கேம்கள் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்களை சித்தரிக்கும் வகையான பின்னணிகளை கொண்டிருக்கின்றன. குற்ற செயல்களில் இருந்து தப்பிக்க தவறான வழிமுறைகளையும் சொல்லி கொடுக்கின்றன.
தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் சிறுவர்களின் மூளையின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்களுடன் செலவிடும் நேரம் குறைந்துபோய்விடும். வீடியோ கேம் விளையாட்டுக்குள்ளேயே முடங்கிபோய்விடுவார்கள். இதனால் மன அழுத்த பிரச்சினைகளும் உருவாகிவிடும்.
இதற்கு என்ன தான் தீர்வு..???
வீடியோ கேம் விளையாடுவதில் விடாப்பிடியாக இருக்கும் பிள்ளைகளிடம் அதிரடியான போக்கை கையாண்டு அதிலிருந்து மீளவைக்க முயற்சிக்காதீர்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டை நீங்களே தேர்வு செய்து கொடுங்கள். அந்த விளையாட்டில் தவறான விஷயங்கள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுங்கள். அதில் தவறான வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தால் அதனை சுட்டிக்காட்டுங்கள்.
தொடர்ந்து விளையாட ஆசைப்பட்டால் அதில் இருந்து மீள்வதற்கான சில கட்டுப்பாட்டுகளை விதியுங்கள். அதனை செயல்படுத்து கிறார்களா? என்பதை கண்காணியுங்கள். வெளி இடங்களில் மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். நீங்களும் குழந்தையாக மாறி அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இத்தகைய செயல்பாடுகள் படிப்படியாக வீடியோ கேம் மோகத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை மீட்டெடுக்க உதவும்.

No comments:

Post a Comment