பட்டாம்பூச்சி!
சின்னச் சிறகை விரித்தே
சீராய் பறக்கும் பூச்சி
பட்டுப் போல அழகாய்
பறக்கும் பட்டாம் பூச்சி
தாழ்ந்து பறக்கும் பூச்சி
பூக்கள் மீது அமர்ந்தே
தேனை உறிஞ்சும் பூச்சி
சிறுவர் விரும்பும் பூச்சி
தீமை செய்யாப் பூச்சி
தொட்டுப் பார்க்கப் போனாலே
எட்டப் போகும் பூச்சி
தூரப் பறந்து போனாலும்
மனம் போகும் பின்னாலே
தேடி நாடிச் செல்வேனே
நல்ல பட்டாம் பூச்சியை !
தெரிந்து சொல்... தெரிந்து சொல்...
பெண் மட்டுமல்ல ஆணுமே
சுமக்க வேண்டும்
மூன்று முடிச்சு
வரமாக முதுகில்தான்
கொட்டை விரும்பும்
பிள்ளையவன் யாரென்று
தெரிந்து சொல்...
விடையாய்
'அணில்' என்றே உரக்கச் சொல்!
கல்வி கற்கலாம்!
உலகம் உனக்காகக் காத்திருக்கு
இடத்தைப் பிடிக்க விரைந்து வா
பறக்கும் இறகாய் கல்வி தான்
பறந்தால் எல்லை எளிதுதான்
படித்தால் வெற்றி உறுதி தான்.
வறுமையை ஓட்டும் கல்விதான்
உயரச் செய்யும் உன்னைத் தான்
விவேகம் இல்லா வேகம் வீண்
கல்வி இல்லா வாழ்வும் வீண்
கற்றால் விடியல் உறுதி தான்.
அழியாச் செல்வம் கல்விதான்
அழியாப் புகழைத் தந்திடும்
பணத்தையும் படிப்பால் வென்றிடலாம்
பல பதவியில் நீயும் அமர்ந்திடலாம்
படித்தால் மட்டுமே இது நடக்கும்.
கற்றல் முதலில் கடினம்தான்
தொடர்ந்தால் அதுவே எளிதுதான்
இமயமாய் உயர்ந்து நீ நிற்க
உதவும் கருவி கல்வி தான்
கற்றே நீயும் கனி தருவாய் !
No comments:
Post a Comment