உண்மையின்
பரிசு
ஒரு ஊரிலே முருகன், கிருஷ்ணன் என இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் வியாபாரம் செய்தே தங்களின் வாழ்கையை நடத்தி வந்தனர். ஒருநாள் ஒரு
பெரியவர் முருகனின் கடைக்கு சென்று “தம்பி, இந்த முலாம் பழங்கள் என்ன விலை என்று
கேட்டார்..” அதற்கு முருகன், “ஐயா, மன்னியுங்கள்.. இவை மிகவும் பழைய பழுதடைந்த
பழங்கள்..இவற்றை வாங்காதீர்கள்.” என்றான்.
அதை கேட்ட அப்பெரியவர், வியப்போடு “தம்பி இப்படி சொன்னால் உன்
வியாபாரம் என்ன ஆகும்? நஷ்டத்தில் அல்லவா முடியும்? என்று கூறினார். அதைக் கேட்ட
முருகன் நான் உண்மையை சொன்னேன் ஐயா.. என்றான். அவர் சிரித்து கொண்டே கிருஷ்ணனின்
கடைக்கு சென்று “தம்பி இந்த தேங்காய் ன்ன விலை? என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணன்..”ஐயா, என்ன விலை என்றா கேட்டீர்கள், இவை என்
தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து பறித்தவை, நெடு தான் பறித்தவை.. என்று
கூறி தான் நினைத்த விலைக்கே விற்று விட்டான். அவரும் சென்று விட்டார்.
பின்பு முருகனிடம் நீ உண்மையை கூறினாய், நான் எப்படி பொய் சொன்னேன்
பார்த்தாயா, அவரும் வாங்கி விட்டார். பாவம் உனக்கு தான் நஷ்டம்.. எனக்கு லாபம்..
என்று சொல்லி சிரித்தான்.. அதற்கு முருகன், நான் உண்மையை சொல்லி பழகி விட்டேன்.
அதனால் நன்மையே உண்டாகும் என்றான்.
சில நாட்களின் பின்பு, அப்பெரியவர் திரும்பி வந்தார். வந்தவர் பொய்
சொல்லித் தன்னை ஏமாற்றிய கிருஷ்ணனை பேசி விட்டு, முருகனிடத்தில் வந்து “தம்பி, நீ
உண்மை பேசியதற்காக உனக்கு நான் ஒரு பரிசு தர விரும்பிகிறேன். எனது பண்ணைக்கு
கணக்கு வழக்கெல்லாம் பார்க்க ஒருவர் தேவை, நீ என்னுடன் வருவாயா என கேட்கிறார்.
அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் முருகனும் அவருடன் சென்றான்.
அங்கு அவனது உண்மையாக இருக்கும் குணத்தை பார்த்த அப்பெரியவர் தனது பண்ணை
முழுவதையும் அவனுக்கே சொந்தமாக எழுதி கொடுத்து விட்டார்.
ஒரு நாள் முருகன் சென்று “ஐயா என் நண்பன் கிருஷ்ணன் மிகவும் நல்லவன்,
இப்போது தன் தவறை உணர்ந்து விட்டான். அவனையும் இங்கு வேலை செய்ய விடுவீர்களா?
இனிமேல் பொய்பேச மாட்டான்.” என்று கெஞ்சினான். அதற்கு அவரும் சம்மதம் சொன்னார்.
இருவரும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கினார்கள்.
பெரியவரும் மகிழ்ச்சி அடைந்தார். பார்த்தீர்களா, உண்மை பேசுவதால்
எப்போதும் நல்லதே நடக்கும். எனவே இச் சிறுவர்கள் போல் நாமும் உண்மையே பேசி
உயர்வடைவோம்.
தாய் சொல்லைத் தட்டலாமா?
ஒரு குளத்தில் அம்மா மீனும், அதனுடைய குட்டி
மீனும் இருந்தன. அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தது.
அம்மா மீனுக்கு வயதானதால், அதனால் வேகமாக
நீந்த முடியவில்லை.
ஆனால் குட்டி மீனோ, அதி வேகமாக நீந்த
ஆரம்பித்தது. அதனால் அதற்குக் கர்வம் கூட ஏற்பட்டது. அது அம்மா மீனைக் கிண்டல்
செய்தது.
“உன்னால், உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை... ஆனால் என்னைப்பார்...
எவ்வளவு அழகாக நீந்துகிறேன்...”எனச் சொல்லி வேகமாக நீந்திக் காண்பித்தது.
அம்மா மீன் சொல்வது எதையும் அந்தக்
குட்டி மீன் கேட்பதில்லை.
ஒரு நாள் மீன் பிடிப்பவன் ஒருவன், மீன் பிடிக்கத்
தூண்டிலுடன் வந்தான். கரையில் அமர்ந்து, சிறு புழுவைத் தூண்டிலில் சொருகிக்
குளத்தில் வீசினான்.
புழுவைத் தூண்டிலில் பார்த்ததும், அதைப் பிடித்து
உண்ணக் குட்டி மீன் விரைந்தது. உடனே, தாய் மீன் அதனிடம் போகாதே... அது
உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில், அதில் மாட்டினால் நீ இறந்து போய்
விடுவாய்” என்றது.
“உனக்கு முடியாததால்... எதைப் பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்...
அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்” என்றது குட்டி மீன்.
அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன்
அந்தத் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக் கொண்டு உயிரிழந்தது.
பயத்துடன் குட்டி மீன்
தாயைப்பார்த்தது.
பின், “அம்மா நீ சொன்னது உண்மை...தான். உன்
பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே
எனக்கும் ஆகியிருக்கும். உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது. தாய் சொல்லை
மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்” என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது
தாகம் தணித்த காகம்
நல்ல வெயில்
புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை. மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக்
கிடந்தன. பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம். அது தண்ணீர் தேடி அலைந்தது.
கடைசியாக ஒரு இடத்தில் சிறிய ஜாடி
ஒன்றில் சிறிது தண்ணீர் இருப்பதைக் கண்டது. நிச்சயம் காகம் தன் அலகை அதனுள்
நுழைத்துத் தண்ணீரைக் குடிக்க முடியாது. அதற்குத் தலையையும் ஒருகுறிப்பிட்ட
அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
காகத்திற்குத் தாகம் அதிகரித்துக்
கொண்டே போனது. பக்கத்தில் வேறு எதாவது கிடைக்குமா என்று சுற்றிலும் பார்த்தது.
அங்கு சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன. அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது
காகம். அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக் கிடந்தது. நாலைந்து
இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால் அச்செடி வாடிக்கிடந்தது.
காகம், அந்தத் தண்ணீர் உள்ள ஜாடியை
நகர்த்திப் போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது. ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம்
தண்ணீர் மெல்லத் தரையில் பரவி,
அந்தச் செடியின் வேருக்குள்
இறங்கியது.
செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும் என்பதை நமக்கு இந்தக் கதை
மூலமாக உணர்த்திய காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்து ஆகாயம் பார்த்துப்
பறந்தது.
வேம்பின் வீம்பு
ஆற்றங்கரையின் ஓரமாக
வேப்பமரமொன்று நன்கு செழித்துப் பருத்து வளர்ந்திருந்தது. அதன் அயலிலே
நாணற்புற்கள் பல வளர்ந்திருந்தன. காற்று வீசும்போதெல்லாம் இந்த நாணற்புற்கள்
எல்லாம் வளைந்தும் நெளிந்தும் தலை தாழ்த்தி நிற்பது வழக்கம். இவற்றைப் பார்த்து வேம்பு
தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்ளும்.
அற்பப் புற்கள்
இவை சிறு காற்றுக்குக் கூட வளைந்து கொடுக்கின்றனவே. என்னைப்போல் நிமிர்ந்து நிற்க
முடியவில்லையே என்று தனக்குள் செருக்குற்றது. நாணற்புற்களைப் பார்த்து ஒருநாள் வேம்பு ஏளனமாகப் பேசியது.
"என்னைப் பாருங்கள்.. எந்தக் காற்றுக்கும் நான் அசைந்து கொடுப்பதில்லை.
உங்களைப் போல் வளைந்து தாழ்ந்து கொடுப்பதில்லை. உங்களுக்கு வீரம் இல்லையா? பலம் இல்லையா? நிமிர்ந்து நிற்க முடியாதா? வெட்கம் வெட்கம்” என்று வேம்பு வீம்பு பேசியது.
அதற்கு
நாணற்புற்கள் "எங்கள் பலம் எங்களுக்குத்தான் தெரியும். உங்களைப் போன்று
எதையும் எதிர்த்து நிற்க எங்களால் முடியாது. நாங்கள் பணிந்து நின்றால் தான்
நிலையாக நிற்க முடியும்" என்றன.
நாணற்புற்களின்
இயலாமையைக் கண்டு வேம்பு மேலும் செருக்குற்றது. ஒருநாள் இரவு திடீரெனப் பலத்த புயற்காற்று
வீசியது. ஆற்றோரத்தில் நின்ற மரங்களெல்லாம் "படபட" வென்று முறிந்து
வீழ்ந்தன. வீம்பு பேசிய வேப்பமரமும் வேரோடு சாய்ந்து வீழ்ந்தது. அதன் கொப்புகள்
எல்லாம் முறிந்து கிடந்தன. இலைகள் எல்லாம் புயற்காற்றில் பறந்து பரந்து கிடந்தன.
மறுநாள் காலை
நாணற்புற்கள் தலை நிமிர்ந்து நின்றன. வீழ்ந்து கிடக்கும் வேம்பின் அவல நிலையைப்
பார்த்து அவை அனுதாபப் பட்டன. "வீம்பு பேசிய வேம்பே உன் வீரம் எங்கே? உனது செருக்கும் விட்டுக் கொடுக்காத தன்மையும்தான் உன்
வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்” என்று நாணற்புற்கள் நயம்படக் கூறின. நாணற்புற்களின் பணிவும் நெகிழும்தன்மையும்
அவற்றுக்கு வாழ்வளித்தன என்பதை வேம்பு அப்பொழுது ஏற்றுக்கொண்டது.
எனவே நாமும்
மற்றவர்களை ஏளனம் செய்யாது, பணிவுடன் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். எல்லோரிடமும்
பலமும், திறமையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment